Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous
Forgiveness

மன்னித்தல்..........

மன்னிக்கும் பண்பு தெய்வீகப் பண்பு என்பர். அதையே வள்ளுவரும்
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் " என்று கூறுகிறார்.அதாவது, பிறர் நமக்குத் தீமை செய்யும்
போது அதனை மன்னித்து விட வேண்டும் என்று கூறுகிறார்.

ஒரு குழந்தை மற்றக் குழந்தைகளுடன் சண்டை பிடிக்கிறது. ஆனால்
சிறிது நேரத்தில் மன்னித்து மறந்து ஒன்றாக விளையாடுகிறது. ஆனால் வளர்ந்த பின்பு மன்னிப்பது கடினமாக இருக்கிறது.

ஒருவர் தவறு செய்தால் மற்றவர் அவரை மன்னித்து மறக்கும் போது
அவர் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தனக்கு தீங்கு செய்தவனை மன்னிக்காது அவன் மீது வர்மம் வைப்பது, மனதின் தூய்மையை மட்டுமல்லாது
உடலின் சுகத்தையே கெடுத்து விடுகிறது. மற்றவர்கள் எமக்கு செய்தவற்றை மன்னிக்காது மனதிற்குள்ளே வைத்து குமுறும் போது எமது உடல் நலமும்
பாதிக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல பிறரை மன்னிக்கத் தயாராக இல்லாத மனது மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மனம் எப்போதும்
பிறருடைய குற்றங்களை நினைத்துக் கொண்டு இருக்கும். மற்றவர்களை மன்னித்து மறக்காதவன் தானும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டான். மற்றவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான்.

பலர் ஒன்று கூடி வாழும் போது பிரச்சினைகள் உருவாகத்தான் செய்கின்றன.
ஆனால் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்கின்ற மனப்பக்குவம் இல்லாது போனால் வாழ்க்கை கசப்பாகி விடும். மன்னிப்பின் அவசியத்தைப் புரிந்து
கொண்டால் மற்றவர்களைத் திருத்தும் நோக்கத்துடன் மன்னிக்கத் தொடங்க வேண்டும்.

ஒருவருக்கு நாம் தண்டனை கொடுக்கும் போது, அன்பில் என்னைத் தண்டிக்கிறார்
என்ற உணர்வு, தண்டனை பெறுபவருக்கு ஏற்படும் விதத்தில் தண்டிக்க வேண்டும். மற்றவர் என்னைத் தண்டிப்பது என்னை உருவாக்கவே என்ற உணர்வு
தண்டனை பெறுபவருக்கு உருவாக வேண்டும்.

மன்னித்து மறப்பதும், மன்னிப்பு கேட்பதும் சிறந்த பண்பு. இதனாலேயே
எம் இயேசுக்கிறீஸ்து தம்மை சிலுவையில் அறைந்தவர்களைப் பார்த்து " பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் " என்றார்.
" பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்... தீராத கோபம் யாருக்கு இலாபம்..." என்பதற்கேற்ப மன்னித்து மறந்து வாழ்வோம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.

.............................................................

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

HTML Comment Box is loading comments...

Send us your articles : tamilrosary@gmail.com