போகும் வழி தெரியவில்லை
செய்வதென்ன என்றும் புரியவில்லை
நீதான் எனக்கு வழியென்று - இறைவா
உன்னையே சரணடைகின்றேன்..........
உலக காரியங்களில் மூழ்கி - இறைவா
உன்னை நினைக்க மறந்து
பெயரும் புகழும் நிலையானது என நினைத்து
முழு மூச்சாக உழைத்தேன் - இறுதியில்
எல்லாம் மாயை என்று புரிந்து - நிரந்தரமான
உன்னிடமே சரணடைகின்றேன் இறைவா..........
மனித உறவுகளை நிஜம் என நம்பி
அவர்களுக்காகவே வாழ்ந்தேன் - ஆனால்
அன்பு வைத்தவர்களோ என்னை அடித்து விரட்ட
நம்பிக்கை வைத்தவர்களோ எனக்கு துரோகம் செய்ய
ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்க - எனக்கு
வழிகாட்டும் ஒளியாய் என் வாழ்வில் வந்தாய்...........
புரியவைத்தாய் உன்னை
தெளிய வைத்தாய் என்னை
இழந்தவை யாவும் நன்மைக்கே - என்று
திடமூட்டினாய் என் மனதிற்கு..............
மானிடவேஷம் கண்டு கலங்கிய எனக்கு - உன்
உண்மையான அன்பை அள்ளிக் கொடுத்து தைரியமூட்டினாய்....
இவ்வுலகமே மாயை நிறைந்தது - மனித
உறவுகளே நிரந்தரமில்லாதது - என
உணர்ந்து கொண்டேன் நன்றே..........
போலியானவற்றை விட்டு இறுதியில்
நீயே சரணாகதி என்று உன்னிடமே
வந்துவிட்டேன் இறைவா - என்னை
உனக்கே சமர்ப்பணிக்கின்றேன்.........